×

அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கால் விசூர் கிராம நெல் கொள்முதல் நிலையத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நாசம்-விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

பண்ருட்டி : பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தில் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமானது. இதனால் சம்பா சாகுபடி செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்துள்ளனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்காக குடோன் வசதி செய்து தரவில்லை.

இங்கு இடைத்தரகர்களின் ஆதிக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூட்டை பிடிப்பது, எடை வைப்பது, லோடு ஏற்றுவது போன்ற பணிகளை மிக மெத்தனமாகவே மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நெல்களை கொள்முதல் நிலையம் கொண்டு வந்துவிட்டு ஒப்படைக்க முடியாமல் தவித்து வருவதாக தெரிகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்தினம் இரவு முதல் பெய்த மழையில் இங்கு வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் முற்றிலும் நனைந்து நாசமாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சம்பா சாகுபடியை எதிர்பார்த்து விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழையில் மூழ்கி சேதமான நெல்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Medana Battal Visur Village Paddy Purchasing Centre , Panruti: 20,000 paddy stored at the Paddy Procurement Center in Visoor village near Panruti due to the lax attitude of government officials.
× RELATED விராலிமலையில் பட்டாசு கிடங்கில்...